சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்கம் காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழையும் ஒருசில நாட்களில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி தமிழகஅரசு ஏற்கனவே கால்வாய்கள், நீர் நிலைகளை தூர் வாரும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் சென்னைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளை கவனத்தில் கொண்டு,   செம்பரம்பாக்கம் ஏரியில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை பார்வையிட உள்ளார்.

இந்த ஆய்வின் போது, நீர்நிலைகளில் உள்ள கதவணைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? மற்றும் கரைகள், வெள்ள தடுப்பு தளவாடங்களின் இருப்பு ஆகியவற்றையும் முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.

இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.