சென்னை: கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாதவரம் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், கோயம்பேட்டில் இருந்து வடக்கே செல்லும் பேருந்துகள் மொத்தமாக விரைவில் விடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பிப்ரவரி 15ந்தேதி முதலமைச்சரால் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த நிலையில், மாதவரம் பேருந்து நிலையத்திலும் அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு செய்தார். இந்த பேருந்து நிலையமானது கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் உருவாக் கப்பட்டது.
அதன்படி, மாதவரத்தில் சென்னையில் இருந்து வடக்கு நோக்கி (ஆந்திரா, நெல்லூர், திருப்பதி மற்றும் காளஹஸ்தி (செங்குன்றம் வழியாக) செல்லும் பேருந்துகளுக்கான தனிப் பேருந்து நிலையம் கடந்த அதிமுக ஆட்சியின்போது, 10.10.2018ல் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதற்காக 94.16 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. மொத்தம் 8 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது வடக்கில் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து முழுமையாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போதுவரை பகுதி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், இதனை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
,இதுதொடர்பாக நேரில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, பேருந்து நிலையத்தில் புதிய வசதிகளை ஏற்படுத்தி தருவதுதொடர்பாக அதிகாரிகளுடன் விவாதித்தார். அப்போது, சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் லட்சுமி இ.ஆ.ப., மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் உடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வடக்கு நோக்கி செல்லும் தனியார் பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இனிமேல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படாது. அனைத்து பேருந்துகளும் மாதவரம் நோக்கி திருப்பி விடப்படும் என்றார்.
மேலும், ஆந்திர மாநில போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மாதவரம் பேருந்து நிலையத்தில் தங்கும் அறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆண் மற்றும் பெண் பயணிகள் தங்கும் கூடங்களை 2, 4 மற்றும் 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றி அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான வேலைகள் தொடங்கவுள்ளன. மேலும் பயணிகள் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி பெட்டி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
முதல் மாடியில் உள்ள பேருந்துகள் காத்திருக்கும் பகுதியில் பேருந்துகள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்து நிறுத்தம் இடத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டிற்கு எல்.இ.டி அறிவிப்பு பலகை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து வளாகத்தின் மாநகர பேருந்து நுழைவு வாயிலில் நுழைவு வளைவு பிரம்மாண்டமாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. மாதவரம் பேருந்து நிலையத்தின் தெற்கு புறம் உள்ள நுழைவு வாயிலில் போக்குவரத்தின் காரணமாக விபத்து நிகழாமல் தடுக்க காவல்துறை உடன் கலந்து ஆலோசித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கட்டிடப் பணிகளை மேம்படுத்தவும் மற்றும் தோட்டத்தை பராமரிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15ந்தேதி திறப்பு!