பெங்களூரு

டக்கு கர்நாடக மாநிலத்தில் விளையும் சிர்சி பாக்குக்கு புவிசார் அடையாளம் வழங்கப்பட உள்ளது.

குறிப்பிட்ட ஒரு இடங்களில் மட்டும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு புவிசார் அடையாளம் வழங்கப்பட்டு வருகிறது. இதை சர்வ தேச நிறுவனமான புவிசார் அடையாள பதிவு நிறுவனம் வழங்கி வருகிறது. இவ்வகையில் டார்ஜிலிங் தேநீர், சேலம் புடவைகள், மைசூர் பட்டு, காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமக்காளம், மதுரை சுங்கடி சேலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு கர்நாடக மாநிலத்தில் சிர்சி பாக்கு என்னும் ஒருவகை பாக்கு விளைகிறது. பல இடங்களில் பாக்கு விளைந்தாலும் சிர்சி பாக்கு என்பது தனி வகையாகும். இவ்வகை பாக்கு வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. இந்த பாக்கு சிர்சி, யேலாப்பூர், சித்தாபுரம் ஆகிய பகுதிகளில் மட்டுமே விளைகிறது. இந்த மூன்று தாலுக்காக்களில் சுமார் 40000 ஏக்கர் நிலத்தில் சுமார் 4 லட்சம் மரங்களில் இந்த பாக்கு விளைகிறது./

இந்த சிர்சி பாக்கு இரு வகைகளில் செய்யப்படுகிறது. இதில் வெள்ளை நிற பாக்கு என்பது பழங்கள் நன்கு பழுத்த பிறகு அதை உடைத்து எடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவை வெயிலில் காய வைக்கப்படுகிறது. மற்றொரு வகையான சிவப்பு நிற பாக்கு பழங்களில் இருந்து எடுக்கப்பட்டு நீரில் கொதிக்க வைத்து நிறம் ஏற்றப்பட்டு அதன் பிறகு வெயிலில் காய வைக்கப்படுகிறது.

தற்போது இந்த சிர்சி பாக்குக்கு புவிசார் அடையாளம் வழங்கப்பட உள்ளது. இதை புவிசார் அடையாள பதிவு அமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பாக்கு வகை உற்பத்தியாளரான ரவிஷ் ஹெக்டே, “பொதுவாக வர்த்தகர்கள் பல இடங்களில் இருந்து வரும் பாக்குக்களை கலந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது சிர்சி பாக்குக்கு புவிசார் அடையாளம் கிடைத்துள்ளதால் இதற்கு ஒரு தனித்தன்மை கிடைத்துள்ளது. இதனால் எங்கள் உழைப்புக்கு ஏற்ற விலை கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.