சென்னை: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், அவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் என்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில், ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்தன. இவை, வட மாநிலங்களில் இருந்ததை போல, பழுப்பு நிறத்தில் இருந்ததால், விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், தலைமை செயலகத்தில் வெட்டுக்கிளி பிரச்னை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு. பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஜூலை மாதம் வரை இருக்கும். வடமாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கம் அதிகமாக உள்ளது.
பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது. கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள். தமிழகத்தில் 200 வகையான வெட்டுக்கிளிகள் உள்ளன.
வெட்டுக்கிளி வந்தால், அதனை அழிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். வெட்டுக்கிளிகளை அழிக்க 3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டு உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநில எல்லைகளை கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார்.