சென்னை: பிரபலமான இந்து கோவில்களின் வடக்கு கோபுர வாசல்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையால் மூடப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கோவில் வாசலை உடனே திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

ஆகம விதியின்படி வடக்கு திசையில் ராஜகோபுரம் கட்டக்கூடாது என்றால், அது தொடர்பான ஆதாரங்களை 9 நிபுணர்கள் கொண்ட குழுவிடம் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டதுடன், கோவில் வாசல்களை உடனே திறக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்து கோவில்களை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. கோவில்களில் வரும் காணிக்கை மற்றும் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வரும் வருமானத்தைக்கொண்டு, கோவில்கள் மட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இருந்தாலும், அவ்வப்போது இந்து கோவில்களை இடிக்கும் நடவடிக்கையிலும் ஈடபட்டு வருகிறது. மேலும், பெரும்பாலான கோவில்களில், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதாக  பல கதவுகள் மூடப்பட்டு ஒருசில கதவுகளை மட்டுமே திறந்து வைத்து கல்லா கட்டி வருகிறது. பழம்பெரும் கோவில்களில் நான்குபுறமும் கோபுரங்களுடன் கூடிய வாசல்கள் உள்ள நிலையில், வடக்கு வாசல் உள்பட சில பகுதி வாசல்கள் மூடியே வைக்கப்பட்டு உள்ளன. இது பக்தர்களிடையே மனவேதனையை கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் மூடப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் என  ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில், ‘திருச்சி, திருவெள்ளறை பெருமாள் கோவில் உள்ள மொட்டை கோபுரத்தை ஆகம விதிகளின்படி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கோவிலில் கிழக்கு பக்கம்தான் ராஜகோபுரம் இடம் பெறவேண்டும். ஆனால், வடக்கு பக்கம் பார்த்து ராஜ கோபுரம் கட்டப்படுகிறது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் செஞ்சில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜராக வக்கீல், ”இந்த கோவில் மிகவும் பழமையானது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் கட்டிடங்கள் மன்னர்களின் படை எடுப்பு காரணமாக சேதப்படுத்தப் பட்டது. பஞ்சரத்ன ஆகமப்படி எந்த திசையிலும் ராஜகோபுரம் கட்டிக்கொள்ளலாம் என்று 9ஆகம நிபுணர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், வடக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டப்படுகிறது. இந்த ராஜகோபுரத்தை கட்ட தனி நபர் ஒருவர் ரூ.5 கோடி நன்கொடை கொடுத்துள்ளார் என்று கூறினார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இதுபோல பேசக்கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. ஆகம விதியின்படி வடக்கு திசையில் ராஜகோபுரம் கட்டக்கூடாது என்றால், அது தொடர்பான ஆதாரங்களை 9 நிபுணர்கள் கொண்ட குழுவிடம் தாக்கல் செய்யுங்கள். இந்த ராஜகோபுரம் கட்டுமான பணிக்கு தடை இல்லை. பணியை தொடரலாம்” என்று கூறினர்.

இதுதொடர்பாக மேலும் கூறிய நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோவில்களிலும் வடக்கு கோபுர வாசல் மூடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களுக்கு தெரியாத ஆகமமா, இப்போது உள்ளவர்களுக்கு தெரியும்? என்று கேள்வி எழுப்பினர்.  ”1726-ம் ஆண்டு பிறந்த அகோர சிவாச்சாரியார் எழுதிய ஆகமத்தின்படி சில கோவில்களில் வடக்கு கோபுர வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் மூடப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.