திண்டிவனம்: தமிழ்நாடு அரசின் அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தானின் மருமகனின் அடாவடி நடவடிக்கை காரணமாக, திமுகவைச் சேர்ந்த 13 கவுன்சிலர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது மருமகன் தலையீட்டால், தங்கள் வார்டுகளில் எதுவும் பணிகள் நடைபெறவில்லை, இதனால் பொதுமக்களை சந்திக்க முடியவில்லை, அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டி உள்துடன், தங்களத கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், முக்கிய நகராட்சியாக இருந்துவருகிறது திண்டிவனம். மொத்தம் 33 வார்டுகளைக்கொண்ட இந்த நகராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், 23 இடங்களைக் கைப்பற்றியது தி.மு.க. அதன்படி, நகராட்சி சேர்மன் பதவியையும் தன்வசப்படுத்தியது. இம்முறை பெண் (பொது) வேட்பாளருக்கு சேர்மன் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளரும் 9-வது வார்டு கவுன்சிலருமான நிர்மலா என்பவர் சேர்மனாக அறிவிக்கப்பட்டார். 22-வது வார்டு வி.சி.க கவுன்சிலர் ராஜலட்சுமி, துணை சேர்மன் ஆனார்.
இந்த நகராட்சியில் அமைச்சர் மஸ்தானின் மருமகனின் தலையீடு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்து 13 தி.மு.க கவுன்சிலர்கள் பிரிந்து தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் ஆகஸ்டு 31ந்தேதி நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க அதிருப்தி கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படுவதில்லை என, எந்தவொரு செயலும் நடைபெறுவது இல்லை, இதனால், தங்களால் பொதுமக்களை சந்திக்க முடியவில்லை, அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய முடியவில்லை என்று பல்வேறு கேள்வி எழுப்பினர். நகராட்சி அமைச்சரின் அழுத்ததிற்கு கட்டுப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டியதுடன், இந்த நகர்மன்றம் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது என்று கூறி நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று அறிவித்து 13 திமுக கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோரது, “நாங்கள் பதவிக்கு வந்து 18 மாதம் ஆகிறது. நகராட்சி எங்கள் வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் அமைச்சர் மாப்பிள்ளையை கேளுங்கள்’ என சொல்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்கள்.
மேலும், நகர்மன்றத்தில், நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பியும், அதற்க எவ்விதமான தீர்வும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்கள் வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அதனால் எங்கள் பகுதி மக்களைச் சந்திக்க முடியாமல் அசிங்கப்படுகிறோம். எங்களுக்கு இந்த மன்றத்தின் மீது நம்பிக்கையில்லை. அமைச்சர் மற்றும் அவரது மருமகன் தலையீடு காரணமாக, திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது, இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டால், “அமைச்சர் மஸ்தான், எங்களை ‘ராஜினாமா செய்துவிட்டு போகச் சொல்கிறார். எங்களை மிகவும் அவமானப்படுத்துகிறார். எதிர்த்து கேள்வி கேட்டால், தகாத வார்த்தைகளைப் பேசி அசிங்கப்படுத்துகிறார்கள். முதலமைச்சரை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுப்போம். அவர் விசாரித்து சொல்லும் அறிவுரையை ஏற்று செயல்படுவோம். அப்படியான பதில் வரும் என காத்திருக்கிறோம். இல்லையெனில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்” என்று அதிருப்தி கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நகர மன்றம் செயல்படுவதால், நாங்கள் எங்களுடைய ராஜினாமா கடிதத்தை தளபதி ஸ்டாலினிடம் கொடுக்கப் போகிறோம்” என்று கூறி 13 கவுன்சிலர்கள் கையொப்பமிட்ட ராஜினாமா கடிதத்தை உயர்த்திக் காட்டினர்.
இதையடுத்து, தங்களது ராஜினாமா தொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில், ‘திண்டிவனம் நகராட்சியில் செயல்படாத நகர மன்றத் தலைவர் இருக்கிறார். அமைச்சர் மஸ்தானுடைய மருமகன் ரிஸ்வானின் கட்டுப்பாட்டில் நகர மன்றம் உள்ளது. மக்கள் தேவைகளை நிறைவேற்ற இயலாததால் நாங்கள் மனம் நொந்து எங்களின் நகர மன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
திண்டிவத்தில் திமுக நகராட்சி தலைமைக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற சலசலப்பு ஏற்பட்டது. நகராட்சி தலைவி நிர்மலாவின் கணவரே (ரவிச்சந்திரன்) நகராட்சி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்றும் , நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, சேர்மனுடைய கணவரே பதிலளித்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுதொடர்பான வகையிலான வீடியோ காட்சிகளும் வைரலானது. அதுபோல துணைத்தலைவியாக உள்ள விசிகவைச் சேர்ந்தவரும் போர்க்கொடி தூக்கினார். “நான் பட்டியல் சமூகம் என்பதால், எனக்கு சேர்மன் அருகே இருக்கை ஒதுக்கவில்லை. ‘அப்படி ஒதுக்கினால், 10 கவுன்சிலர்கள் வெளியேறிடுவோம்’ எனச் சொல்வதாக சேர்மனுடைய கணவர் (ரவிச்சந்திரன்) சொல்கிறார்” என்று நகர்மன்றக் கூட்டத்திலேயே வெளிப்படையாகவே தனது ஆதங்கத்தைப் போட்டுடைத்திருந்தார் துணை சேர்மன் ராஜலட்சுமி. இந்தச் சம்பவம், நகராட்சி நிர்வாகத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இப்படியான சூழலில்தான்… ரவிச்சந்திரனுக்குப் பின்புலத்தில், சந்திரன் என்ற தி.மு.க கவுன்சிலர் இருப்பதாகவும், அவர் அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வானுக்கு மிகவும் இணக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், திண்டிவனம் தி.மு.க கவுன்சிலர்கள் சிலர்… தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி, நகராட்சி சேர்மனுக்கு எதிராக ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ கொண்டுவரும் முடிவில் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன