திருவண்ணாமலை: சத்துணவில் தினசரி முட்டை வழங்கப்பட்டுவரும் நிலையில்,   அந்த முட்டையை  கேட்ட மாணவனை சத்துணவு பெண் ஊழியர்கள்  துடைப்பத்தால் அடித்து விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அந்த  சமையல் உதவியாளர்கள் தற்காலிக பணிநீக்கம்  செய்யப்பட்டு இருப்பதாக மாவட்டநிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவின்போது, வழக்கமாக கொடுக்கும் முட்டை கொடுப்படாததை கண்ட, ஒரு மாணவன் சத்துணவில் முட்டை எங்கே என கேட்டு சமையலறை சென்று பார்த்தபோது, அங்கு முட்டைகள் பதுக்கி வைத்திருந்த நிலையில், இதை பார்த்த சத்துணவு பெண் ஊழியர்கள், அந்த  மாணவன் மீது துடைப்பத்தால் தாக்குதல் நடத்தினர். யாரை கேட்டு உணவகம் உள்ளே வந்தாய் என்று அந்த மாணவனை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலானது இது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பெண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முட்டை கேட்ட மாணவர்களை துடைப்பத்தால் அடித்த சமையல் உதவியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு நடந்த முழு சம்பவம் என்ன என்பது குறித்து சமூக நல ஆணையம் தரப்பில் அரசுக்கு  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக நல ஆணையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்  “திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செங்குணம் கொல்லை மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியும் லக்ஷ்மி மற்றும் முனியம்மாள் சமையல் உதவியாளர் ஆகியோர் அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் S.ஜோதீஸ்வரன் என்பவரை துடைப்பதால் தாக்கும் வாட்ஸ் அப் வீடியோ வெளிவந்ததை தொடர்ந்து, நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அதற்கான அறிக்கையினை பின் வருமாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 43 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். தாக்குதல் சம்பவம் நடைபெற்ற 02.04.2025 அன்று மதியம் மாணவன் S.ஜோதீஸ்வரன் சத்துணவு சமையலர் லட்சுமி என்பவரிடம் முட்டை வழங்க கேட்டதாகவும், அதற்கு இன்று சமைத்த 43 முட்டைகளில் மூன்று முட்டைகள் உரிக்கும்போது சேதம் அடைந்து உடைந்து விட்டதாகவும், அதற்கு பதில் நாளை முட்டை வழங்குவதாக சமையலர் (ம) உதவியாளர் கூறியுள்ளனர்.

இதனை கேட்ட அந்த மாணவன் மேற்படி இரு பணியாளர்களையும் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சமையலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் மாணவனை துரத்திச் சென்று பிடித்து, லட்சுமி என்ற சமையலர் அங்கிருந்த துடைப்பத்தால் இரண்டு முறை தாக்கியுள்ளார். மேற்படி, சம்பவத்தை அருகில் இருந்து கவனித்து வந்த நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் சரத் என்பவர் வகுப்பில் ஆசிரியை புளோரா என்பவரின் மேஜையின் மேல் இருந்த செல்போனை எடுத்து அதில் வீடியோ பதிவு செய்து, அதனை பள்ளியில் மேலாண்மை குழுவில் உள்ள தமது பெற்றோருக்கு பகிர்ந்து உள்ளார் என சம்பந்தப்பட்ட மாணவர் அளித்த வாக்குமூலம் மற்றும் ஆசிரியை அளித்த வாக்குமூலம் வாயிலாக தெரிய வருகிறது.

மாணவர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சம்பவம் நடந்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவர், அவரது பெற்றோர், ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட சமையல் உதவியாளர் ஆகியோர்களை நேரில் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்திய பணியாளர்கள் தமது தவறை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய போளூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டதாகவும் அங்கேயே உடனடியாக தற்காலிக பணிநீக்க ஆணை மேற்படி பணியாளர்களுக்கு சார்பு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருவண்ணாமலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அரசுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது”

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.