இன்று பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு குறித்த அவசர சட்டத்தை உடனடியாக கொண்டுவர வலியுறுத்தினார், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காலை 1030 மணி முதல் 10.3 7 வரை வெறும் ஏழு நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் மாண்புமிகு சின்னம்மா அவர்களும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள்.

தமிழகத்தில் மழை பொய்த்து கடும் வறட்சி நிலவுவதால், சுமார் 35 ஆயிரம்  கோடி ரூபாய் மத்திய அரசு உதவ வேண்டும் என்று மூன்று நாட்களுக்கு முன் தமிழக வருவாய்த்துறை உயர் அதிகாரி டில்லிக்கு வந்து மத்திய அரசிடம் கடிதம் கொடுத்தார்.

இந்த இரு விசயங்கள் குறித்தும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்த நேரம் கேட்டிருந்தேன். இன்று என்னை சந்திக்க மாண்புமிகு பிரதமர் வாய்ப்பளித்தார்.

ஜல்லிக்கட்டு தடை நீக்க வேண்டும் என்பது குறித்து நான் சொன்னதை மிகவும் பரிவுடன் கேட்டுக்கொண்டார்.  “இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளை நன்றாக புரிந்துகொண்டிருக்கிறேன். அவர்களது உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பளிக்கிறேன்” என்று பிரதமர் சொன்னார்.

மேலும், “ஜல்லிக்கட்டு குறித்தான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பளிக்கவில்லை. ஆகவே, மாநில அரசு இதுதொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணையாக நிற்கும்” என்றும் பிரதமர் தெரிவித்தார். ஆகவே ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து தகுந்த நடவடிக்கையை மாநில அரசு எடுக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். நன்மையே யாவும்.. நன்மையே விளையும்” என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.

அவரிடம் செய்தியாளர்கள், “ஜல்லிக்கட்டு குறித்து அவசர சட்டம் கொண்டுவர முடியாது” என பிரதமர் தெரிவித்துள்ளாரே” என்று கேட்டதற்கு,மீண்டும், “நன்மையே யாவும்.. நன்மையே நடக்கும்” என்று வழக்கமான மந்திரப்புன்னகையுடன் தெரிவித்தார்.

அடுத்ததாக, “நீங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து சொல்லி வருகிறீர்கள். ஆனால் உங்கள் அதிகாரித்துக்கு கீழ் இருக்கும் காவல்துறையினர், ஜல்லிக்கட்டு போராளிகள் மீது கடுமயான தடியடி நடத்துகிறார்கள். அவர்கள் மீது நடவடிககை எடுப்பீர்களா” என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஓ.பி.எஸ், “எங்கும் தடியடி நடந்ததாக தகவலே இல்லை” என்று சொல்லிவிட்டு அத்தோடு செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.