ஹரித்வார்:

புனித நகரமான ஹரித்துவாரில்,  அசைவ உணவு விநியோகம் செய்ததற்காக ஷொமட்டோ, சுவிக்கி நிறுவனங்களுக்கு உத்தரகாண்ட் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களுக்குள் ஒன்றான ஹரித்வாரில் அசை உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், அசைவ உணவு  தேவையென்றால், அதை விற்பனை செய்வதற்கு ஹரித்வார் நகராட்சியிடம், அதற்குரிய காரணம் கூறி, அனுமதி பெற வேண்டும். இந்த நடவடிக்கைகளை யாரும் விரும்பாததால், அங்கு அசைவ உணவுகள் தவிர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போதைய டிரென்டான சுவிக்கி, ஷொமட்டோ போன்ற நிறுவனங்கள் மூலம்  அசைவ உணவுகளை சிலர் ஆர்டர் செய்து வாங்கியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மாநில அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், அசைவ உணவு கொண்டு சென்றது உறுதியான நிலையில், சம்பந்தப்பட்ட உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்திய  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் மற்றும் தடையில்லாச் சான்றுகளை சுவிக்கி, ஷொமட்டோ நிறுவனங்கள் சமர்ப்பிக்க  தவறி விட்டதாக கூறியுள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்  7 நாளில் பதில் அளிக்கும்படி அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தகுந்த பதில் அளிக்காவிட்டால், சுவிக்கி, ஷொமட்டோவுக்கு  தடை விதிப்பது குறித்து ஆலோசிக் கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.