சென்னை

சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேட்பு மௌ பெறும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

நேற்று சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

”சென்னை மாவட்டத்திற்குட்பட்ட வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. 3 தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் இன்று (20-ந்தேதி) முதல் வரும் 27-ந்தேதி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெறப்படும். 

அதன்படி, வடசென்னை தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டை, பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா, முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.தனலிங்கம் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம். தென் சென்னைக்கு அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.பி.அமித், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பி.எம்.செந்தில்குமார் ஆகியோரிடம் வேட்புமனுக்களை அளிக்கலாம்.  

மத்திய சென்னைக்கு செனாய் நகர், புல்லா அவென்யூ சாலையில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா ஆகியோரிடம் வேட்புமனுக்களை வழங்கலாம்.” 

என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.