சென்னை:
இரு அணிகளும் இணைவது குறித்து எங்களிடம் கருத்துக்கேட்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த விஷயத்தில் நாலைந்து அமைச்சர்கள்தான் பேசி வருகிறார்கள். அவர்கள் மட்டுமே அதிமுக கிடையாது, எம்.எல்.ஏக்களிடம், கட்சியின் இணைப்பு குறித்து இதுவரை யாரும் கருத்து கேட்கவில்லை என்றும் கூறினார்.
ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுக 2 அணிகளாக உடைந்தது. தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை யில் ஒரு அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.
இரு அணிகளும் இணைய இன்று மாலை பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்து எந்த எம்எல்எக்களிடம் இதுவரை கருத்து கேட்க வில்லை என்றார். நாலைந்து அமைச்சர்கள்தான் அதிமுக கட்சியையே நிர்ணயிப்பார்களா? இவர்களுக்கு யார் அந்த உரிமை கொடுத்தது. ஆட்சியைத் தக்கவைப்பது, இரட்டை இலையை மீண்டும் பெறுவது என்ற இரண்டும் இவர்களுக்கு முக்கியம் என கூறியுள்ளனர். குறிப்பிட்ட நான்கைந்து அமைச்சர்கள் தான் இதுகுறித்து பேசுகிறார்கள் என்றார்.
இப்போதும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் உள்ள அதிமுகதான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இதற்கு எடப்பாடி கே.பழனிசாமிதான் முதலமைச்சராக உள்ளார் என்றார்.
ஆனாலும் பேச்சுவார்த்தை குறித்து, இதுவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரிடமும் பேச்சுவார்த்தை குழுவினர் கலந்து பேசவில்லை. எம்.எல்.ஏக்களின் மனநிலை என்ன அவர்கள் என்ன நினைக்கி றார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு அக்கறையும் இல்லை என்றும்,
ஆனால், பேச்சு வார்த்தையில் இவர்கள் எதை அறிவித்தாலும் அதிமுக எம்எல்ஏக்கள் அதற்குக் கட்டுப்படுவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன், தற்போதைய சூழலில் அவர்கள் எதிர்த்து பேசப்போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.