பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் நீட்டா டிசோசா கேள்வி எழுப்பினார்.

டெல்லியில் இருந்து குவாஹாத்திக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த நீட்டா டிசோசா தன்னுடன் அதே விமானத்தில் பயணம் செய்த மத்திய அமைச்சரிடம் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

விமானத்தில் இருந்து இறங்க முயன்ற மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியை பின்னால் இருந்து அழைத்த நீட்டா டிசோசா, “2014 ம் ஆண்டு பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. சிலிண்டரின் விலையை ஒப்பிடும்போது, சிலிண்டரின் விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக” கூறிய டிசோசா, “தற்போது சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது ஏன் ?” என்று கேள்வி எழுப்பினார்.

நீட்டா டிசோசாவின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஸ்ம்ரிதி இரானி, “நீங்கள் மற்ற பயணிகள் இறங்குவதற்கு வழிவிடாமல் மறித்து நிற்கிறீர்கள்” என்று மழுப்பினார்.

“விலைவாசி உயர்வால் அனைவரும் அல்லல் படுகிறார்கள் அது உங்களுக்கு தெரியவில்லையா ?” என்று டிசோசா கூறினார்.

இதற்கு அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, “அவர்கள் யாரும் இதுகுறித்து பேசவில்லை நீங்கள் தான் குற்றம்சாட்டுகிறீர்கள்” என்று கூறியதோடு விமானத்தில் இருந்து இறங்கலாம் வாருங்கள் என்று கூறி விமானத்தில் இருந்து இறங்கினார்.

அமைச்சரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீட்டா டிசோசா அதனை தனது மொபைலில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார்.

மேலும், “கோடிக்கணக்கான மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், ரேஷன் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டதாகவும்” கூறிய ஸ்ம்ரிதி இரானி விலைவாசி உயர்வு குறித்த காரணத்தை கூறாமல் நகர்ந்து சென்றார்.