நெட்டிசன்:

வனத்துறையைச் சேர்ந்த Vkssubramanian Vks   அவர்களின்  முகநூல் பதிவு:

தேனி மாவட்டத்தில் மலையேற்றம் சென்று காட்டுத்தீயில் சிக்கிய சம்பவத்தில் இதுவரை தொலைக்காட்சிகள் நேரடி காட்சிகள், கள நிலவரம் அலசுகிறோம் என்ற பெயரில் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கி சென்றார்கள்.

இப்போது அடுத்த கட்டமாக வனத்துறை சரியாக கண்காணிக்கவில்லை.

சோதனைச்சாவடிகள் அமைத்து உள்ளே செல்பவர்களை தணிக்கை செய்யவில்லை.

அல்லது தெரிந்தே உள்ளே அனுப்புகிறார்க்ளா என வித, விதமாக குற்றம் சாட்டும் வகையில் செய்திகளை போட்டு வருகிறார்கள்.

ஒரு வாரத்திற்கும் மேலாக வனத்தீ என்றும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

அணைக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும் சொல்கிறார்கள்.

ஒரு வாரமாக அந்த தீயை அணைக்க அல்லது கட்டுப்படுத்த அங்கிருக்கும் பணியாளர்கள் எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என யாரும் யோசிப்பதில்லை.

இவர்களுக்கு சரியான சாதனங்கள் உள்ளனவா?

காடுகளுக்குள் இன்னும் நாம் இலை, தழைகளை ஒடுத்துதானே தீயை அணைக்கிறோம்.

ஓய்வெடுத்து பணியாற்றவோ, இந்த வேலை மட்டும்தான் என்னும் அளவிற்கோ
என்றா நம் பணி உள்ளது.

அய்யா, செய்தி போடுகிறோம் என்று நீங்கள் உங்கள் மனதிலுள்ள எண்ணங்களை வெளியிடும் முன் உண்மை கள நிலவரங்களையும் வெளியிடுங்கள்.

காட்டிற்குள் கும்பலாக வருபவர்களுக்கு உண்மையிலேயே வனத்துறையினர் வந்து யானை உள்ளது, புலி உள்ளது, தீ பிடிக்கும், இப்படி பல்வேறு ஆபத்துகள் உள்ளன என்று சொன்னால்தான்
பாவம் இந்த படித்த மக்களுக்கு தெரியுமா?

சின்ன குழந்தை கூட சொல்லும் காடு என்றால் பயம், ஆபத்து உள்ளது என்று. அப்படியிருக்க தெரிந்தே எவ்வித அனுமதியும் பெறாமல், தவறு என தெரிந்தே உள்ளே செல்லும் இந்த படித்த அறிவாளிகளை என்னவென்று சொல்வது.

ஆயிரணக்கணக்கான ஹெக்டர் பரப்பிலுள்ள ஒவ்வொறு சுற்று காவல் காட்டினையும் கண்காணிப்பதும், காவல் காப்பதும் வெறும் இரண்டு களப்பணியாளர்களும், உதவிக்கு ஐந்தாறு பேர்களும் மட்டுமே என்பதும், அந்த பணியிடங்கள் கூட சரிவர நிரப்பப்படாமல் துறையில் சுமார் 40% களுக்கும் மேல் பணியிடங்கள் காலியாகவுள்ளதும் இவர்கள் அறிவார்களா?

இவர்களது செய்திகளால் நாளை பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகப்போவது யார் தெரியுமா? ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் மேலாக வனத்தீயை அணைக்க குடும்பத்தை விட்டு, சரியான உணவு, நீர், தூக்கமின்றி அங்கு கஷ்டபடும் களப்பணியாளர்கள் தான்.

உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டுமெறால் உரிய அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்த அந்த மாணவர்களையும், அவர்களை அழைத்து சென்றவர்களுக்கும் தான். அதோடு இவர்கள் சார்ந்த கல்லூரி மீதும் மாணவர்களை கண்காணிக்காமல் விட்டதற்காகவும், அரசு சட்ட திட்டங்களை மதிக்க கற்று கொடுக்காததற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவர்கள் மீது எடுக்கம் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

அய்யா, ஊடக நண்பர்களே தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 20% எனவுள்ள வனப்பகுதிகளை காவல் காக்கும் களப் பணியாளர்கள் வெறும் 5500 பேர்கள் தான் என்பதையும், இந்த பணியிடங்களிலும் சுமார் 40% காலியாகவே உள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்.
உண்மை இவ்வாறு இருக்க வனப்பகுதி எல்லைகள் முழுக்க சோதனைச்சாவடிகள் அமைப்பதோ, உள்ளே செல்லும் அனைவரையும் பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதோ எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பதை உங்கள் எண்ணத்திற்கே விட்டு விடுகிறேன்.

ஏற்கனவே இரவில் யானைகள் பிரச்சனை, பகலில் வனப்பாதுகாப்புடன் அரசின் திட்டங்களை செயலாக்குதல் உள்ளிட்ட இதர பணிகளையும் சேர்த்து இரவு பகலாக நாட்டுக்காகவும், நாட்டின் சொத்துக்களாம் காடுகளை காக்கவும் செயலாற்றும் எங்கள் மீது விமர்சனங்களை வைப்பதை காட்டிலும், மக்களிடையே வனங்களையும், வன விலங்குகளீயும் குறித்த் புரிதல்களையும், தக்க விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவீர்களேயானால் அது உண்மையிலேயே நலம் பயக்கும்.