புதுடில்லி: தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்படும் வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடாது என உயர்நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், தீர்ப்புக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட வழக்குகளில் 3 மாதங்களுக்குள் காரணங்களுடன் கூடிய தீர்ப்பை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.

ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் 2022 முதல் சில குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்க தாமதமானதாக தொடரப்பட்ட மனுவை விசாரிக்கும் போது, நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தீர்ப்புகள் குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஜாமீன் மனுக்கள் தொடர்பான வழக்குகளில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜாமீன் உத்தரவை அதே நாளிலோ அல்லது அதிகபட்சம் மறுநாளிலோ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் மட்டும் முதலில் அறிவிக்கப்பட்டால், முழுமையான தீர்ப்பை 15 நாட்களுக்குள் பதிவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீர்ப்புக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட வழக்கில் 4 மாதங்கள் கடந்தும் தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், அந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேபோல், 3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள தீர்ப்புகள் குறித்து பதிவாளர், தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகள், ஆட்கொணர்வு மனுக்கள், இடிப்பு நடவடிக்கை தொடர்பான வழக்குகள் போன்ற அவசர வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்:

  • தீர்ப்புக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட வழக்குகளில் 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்.
  • ஜாமீன் மனுக்களில் உத்தரவு அதே நாளிலோ அல்லது மறுநாளிலோ வழங்கப்பட வேண்டும்.
  • ஜாமீன் வழங்கப்பட்டால் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தீர்ப்பின் முக்கிய பகுதி மட்டும் அறிவிக்கப்பட்டால், முழு தீர்ப்பை 15 நாட்களுக்குள் பதிவேற்ற வேண்டும்.
  • 3 மாதங்களுக்கும் மேலாக தீர்ப்பு தாமதமானால் பதிவாளர், தலைமை நீதிபதிக்கு தகவல் அளிக்க வேண்டும்.
  • 4 மாதங்களாகியும் தீர்ப்பு வராவிட்டால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற மனு தாக்கல் செய்யலாம்.
  • தீர்ப்புகள் மற்றும் வழக்கின் நிலை விவரங்களை உயர்நீதிமன்ற இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும்.
  • தீர்ப்புகள் பதிவேற்றப்பட்டதும் வழக்கறிஞர்கள் மற்றும் தரப்பினருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

[youtube-feed feed=1]