சென்னை: தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு என பொதுமக்கள் புகார் கூறி வந்த நிலையில், பால் தட்டுப்பாடு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி 38 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும் நிலையில் கடந்த ஒரு வாரமாக 28 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே வினியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பால் விநியோகர் சங்கமும் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த பரபரப்பான சூழலில்,  பல பகுதிகளில் காலதாமதமாகவே பால் இறக்குமதி செய்யப்பட்டு காலை 9 மணிக்கு பிறகு வினியோகம் நடைபெறுவதாகவும் தகவல் வெளியானது. இது பொது மக்களிடையே பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்தனர். சில இடங்களில் தாமதமாக டெலிவரி செய்யப்படும் பால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆவின் அலுவலகத்தில் அமைச்சர் நாசர் இன்று நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். பால் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த அவர், பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் பால் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  பால் உற்பத்தி குறைவு காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிவித்தார். பால் தட்டுப்பாடு பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்தில் ஏற்பட்ட சிறிய மாற்றங்களால் சில இடங்களில் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், மூன்று விதமான ஆய்வுகளுக்கு பிறகு பால் வினியோகம் செய்யப்படுவதால் பால் அளவு குறைவாக இருப்பது என்று சொல்வது தவறான தகவல். கோடைகாலம் வர உள்ளதால் ஆவினில் கூடுதலான வித விதமான ஐஸ்கிரீம்கள் தயார் செய்யப்பட உள்ளன. கலப்படம் இன்றி பால் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் சேவைக்காக ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறதே தவிர, லாபத்திற்காக அல்ல .

இவ்வாறு கூறினார்.

ஆவினின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் அமைச்சர் நாசர்! தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு