சென்னை: சென்னை பல்கலைக்கழக வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கிய நிலையில், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்களுக்கு 3 மாதங்களாக  ஊதியம் வழங்காததைக் கண்டித்து வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபலமான பல்கலைக்கழகங்களில் முதன்மையானது சென்னை பல்கலைக்கழகம் ((University of Madras).  இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான இது 1851-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் . லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. நாட்டின் குடியரசுத் தலைவர்களை உருவாக்கியதுடன் பல அறிஞர் பெருமைக்களை உருவாக்கிய  பெருமைக்குச் சொந்தமானது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது.

தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்களின் முறைகேடான  நடவடிக்கைகளை காரணமாக, சென்னை பல்கலைக்கழகம் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது. இதனால், அதற்கான நிதி ஒதுக்குதல் மற்றும் திட்டமிடுதல் என அனைத்திலும் ஊழல் தலைவித்தாடுகிறது. இது காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கான நிதி குறைக்கப்பட்டது. நிர்வாகத்தை சீர்ப்படுத்தி செம்மைப்படுத்த பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில்,  முறையான கணக்கு தாக்கல் செய்யாத காரணத்தால்,  சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி முடக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே நிதி சிக்கலில் சிக்கி தவித்து வரும் சென்னை பல்கலைக்கழகம், முறையான பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்காத நிலையில், தற்போது மேலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததுடன்,  ஊதியம், ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும், விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கக் கூடத் தடுமாறும் நிலை உருவாகியது.

இந்த விவகாரம் பேசும்பொருளான நிலையில், பல்கலைக்கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அதை செலுத்த முடியாத நிலை தொடர்கறிது. இதில், மாநிலஅரசும் கவனம் செலுத்தாமல் மெத்தனமாக இருந்து வருகிறது. இதையடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்பிறகே தமிழ்நாடு அரசு, சென்னை பல்கலைக்கழக  நிதி நெருக்கடியை சீர்செய்யும் வகையில், 7 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  கணக்குத் தணிக்கைகளின்போது, பல்கலைக்கழகத்தின் பதிவாளர், உயர் மட்டக் குழுவின் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள  வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூடி, விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  மார்ச் மாதமும் இன்று பிறந்துவிட்டநிலையில், 3 மாத சம்பளம் இன்னும் கைக்கு வரவில்லை என்று கூறி பேராசிரியர்கள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வேலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களும் உடன் இணைந்து போராட்டத்தில் பங்குபெற்றுள்ளனர். இதனால் பல்கலைக்கழகப் பணிகள் முடங்கி உள்ளன.