சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்னும் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்து 4,629 பேர்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டிலேயே கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகம் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலம் தமிழகம்தான்.

பிற மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைக்கப்பட்டாலும் தமிழகத்தில் குறைக்கப்படவில்லை. பிற மாநிலங்களும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை நடத்த பிரதமரே வலியுறுத்தினார்.

சென்னையை பொறுத்தவரை ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.