தென் அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறினாலும் கடலில் தான் மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “அரபிக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக தொடங்கியுள்ளது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக மாற உள்ளது. இதனால், தரையில் மழைக்கு வாய்ப்பில்லை. கடலில் தான் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழையால் இந்தமுறை வழக்கத்தை விட குறைவாகவே மழை கிடைக்கும்.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். புயல் 5 நாட்கள் கடந்து குஜராத்தை அடைய உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. மீனவர்கள் அடுத்த 3 தினங்களுக்க மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில், திருவள்ளூர், சென்னை, புதுச்சேரி, திருச்சி மற்றும் கரூர் உள்ளிட்ட மத்திய, வட மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் அனல் காற்று வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 43 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. திருத்தணியில் வெயில் 42 டிகிரி செல்சியசாக பதிவானது” என்று தெரிவித்தார்.