லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 30 வரை மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்று.
அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,621 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து நோய் தீவிரமடைவதை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 11 அதிகாரிகளுடன் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் முக்கிய ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க புதியதாக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை தொடர்பாக தனது டிவிட்டரில் யோகி ஆதித்யநாத் ஒரு அறிவிப்பி வெளியிட்டு உள்ளார். அதில் ஜூன் 30ம் தேதி வரை மக்கள் பொதுவெளியில் கூட்டமாக கூட தடை விதிக்கப்படுகிறது. நோய் பாதிப்புக்கு ஏற்ற வகையில் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.