திருவனந்தபுரம்

றிவுத் திறன் குறைபாடு உள்ள கேரளப் பெண் ராஜி ராதாகிருஷ்ணன் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 1000 முகக் கவசங்கள் தைத்து அளித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்.  அன்று முதல் கேரளாவில் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டது.   இடையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டன.  காவல்துறையினரும், சுகாதாரத் தொழிலாளர்களும் இந்த நடவடிக்கைகளில் தங்களது பங்கை பெருமளவில் அளித்தனர்.

இவர்களில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அறிவுத் திறன் குறைபாடு உள்ள பெண்ணான ராஜி ராதா கிருஷ்ணன் என்பவரும் ஒருவர் ஆவார்.  இவரது தாய் பிரபா உன்னி ஊனமுற்றோருக்காக மதர் குவின் ஃபவுண்டேஷன் என்னும் சிறப்பு தன்னார்வு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  இந்த நிறுவனம் கடந்த 6 வருடங்களாக இயங்கி வருகிறது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் அளித்து சுமார் 20 முதல் 40 குடும்பங்களின் பசியை பிரபா உன்னி போக்கி வருகிறார்.

ராஜி ராதாகிருஷ்ணன் எந்த ஒரு வேலையிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பார்.  அவருக்கு ரூபாய் நோட்டு சேகரிப்பு பழக்கம் இருந்தது.    அதற்காக அவருக்கு அவருடைய தாயார் பணம் கொடுத்தால் மட்டுமே எந்த ஒரு பணியையும் செய்வார்.  ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த பிறகு அவர் பணம் வாங்காமலே முகக் கவசங்களைத் தைக்கத் தொடங்கி உள்ளார்.

ராஜியை அறிவுத் திறன் குறைந்தோருக்கான சிறப்புப் பள்ளியில் சேர்ந்த போதும் அவர் தனது ஆர்வமின்மை காரணமாக அங்குச் செல்ல விரும்பவில்லை.    ஆயினும் அவர் தையற்கலையை சில தினங்கள் பயின்றுள்ளார்.  தற்போது சுமார் 1000 க்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் தைத்து சுகாதார தொழிலாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இவர் அளித்துள்ளார்.

ராஜி தைத்த முகக் கவசங்களை மாநகராட்சி உறுப்பினரிடம் எடுத்துச் சென்று பிரபாவும் ராஜியும் அளித்துள்ளனர்.   அப்போது அங்கு வந்த கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா ராஜியைப் பற்றி அறிந்து மிகவும் பாராட்டியதால் ராஜி மிகவும் மகிழ்ந்துள்ளார்    அத்துடன் ராஜியைப் பற்றி கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தாம் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.