டில்லி:

‘‘சொத்து பரிமாற்றங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கும் திட்டம் இல்லை’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதற்கு ஏற்ப சொத்துக்களோடு ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக சொத்து பரிமாற்றத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்படும் என்று பரவலான பேச்சு எழுந்தது.

இந்நிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி லோக்சபாவில் எழுத்தப்பூர்வ பதில் ஒன்றை இன்று தாக்கல் செய்தார்.

அதில், ‘‘பத்திர பதிவு அலுவலகங்களில் சொத்துக்களை ஆதார் அடிப்படையில் பதிவு செய்வதற்கான சாத்திய கூறுகளை தெரிவிக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சொத்து பரிமாற்றங்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை’’ என்று தெரிவித்திருந்தார்.

சொத்து பரிமாற்றத்திற்கு ஆதார் இணைக்க கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர்,‘‘இந்த கேள்வி எழ வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.