டெல்லி:

‘‘அரசியல் ரீதியாக பிரதமர் மோடியிடம் எதுவும் பேசவில்லை’’ என்று டெல்லியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

முன்னாள் முதல்-வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, எம்.பி. மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில், ‘‘ தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினோம்.

விவசாயிகளின் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு விலக்கு, அத்திக்கடவு – அவிநாசி திட்டம், சேலம் உருக்காலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விரிவாக கூறினோம்.’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்” என்றார்.