டில்லி:

நாம் சேகரித்து வைத்திருக்கும்  ஆதார் தகவல் களை திருடவே முடியாது என்று ஆதார் ஆணையம் உறுதிப்பட தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக தனி மனித உரிமையை பாதிக்கும் வகையில், ஆதார் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் ஆதார் தகவல்களை அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ திருடியதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது

இந்நிலையில், ஆதார் தகவல்களை திருடவே முடியாது என்று ஆதார் ஆணையம் குறிப்பிட்டு உள்ளது.

ஆதார் அட்டைகளில்  கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும்.

தனி மனித அடையாளங்கள் கொண்ட ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது..  பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும். இந்த திட்டம்  2009 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

இதற்காக பொதுமக்களின் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.  இதுவரை நாடு முழு வதும் 115 கோடி மக்களின் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற ஆதார் கட்டாயம் என மக்களிடம் அரசு திணித்து வருகிறது.

இந்நிலையில், ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக வெளிவரும் தகவல்கள் தவறானது என்றும்,  பயோமெட்ரிக் தொழில்நுட்பம் நமது நாட்டின் பிரத்யேக தொழில்நுட்பம் என்றும்,
அதில் மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆதார் ஆணையம் கூறியுள்ளது.

மக்கள் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. எனவே திருடப்பட்டதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்றும்  தெரிவித்துள்ளது.

மேலும், ஆதார் தகவல் சேகரிப்புக்காக, பயோமெட்ரிக் சாதனங்களை பயன்படுத்தும் முன், முழுமையாக பரிசோதிக்கப்படுவதாகவும், . இதற்கு, எஸ்.டி.கியு.சி., எனப்படும், தர பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.