சென்னை

மிழகத்தில் காங்கிரஸைத் தவிர்த்து விட்டு யாராலும் ஆட்சி அமைக முடியாது என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முன்னாள் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். இவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.  தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது.   இதையொட்டி தினேஷ் குண்டுராவ் ஒரு செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.  அதில் இருந்து சில முக்கிய பதில்கள் இதோ.

தினேஷ் குண்டுராவ், “கர்நாடகாவைச் சேர்ந்த என் மீது நம்பிக்கை வைத்து சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் எனக்குத் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் பதவியை வழங்கி உள்ளனர். நான் தமிழகம் போன்ற பெரிய மாநிலத்தில் கட்சிப்பணி புரிய ஆர்வமாயிருக்கிறேன்.  தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

நான் தமிழகத்துக்கோ தமிழ்கர்களுகோ புதியவன் கிடையாது.   எனது காந்தி நகர் தொகுதியில் தமிழ் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.  அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக உள்ள எனக்காக திமுக மற்றும் அதிமுகவினர் கட்சி வேறுபாடுகளை மறந்து தேர்தல் பணி புரிந்துள்ளனர்.

எனது தந்தை குண்டு ராவ் முதல்வராக இருந்த போது தமிழக முதல்வராக இருந்த எம் ஜி ஆரை அண்ணன் என அழைப்பார்.  எம் ஜி ஆர் பெங்களூரு வரும் போது அவசியம் எங்கள் வீட்டுக்கு வருவார்.   காங்கிரஸ் கட்சியில் இருந்த சிவாஜி கணேசனுடனும் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர்.  எனவே எனக்கு தமிழர்களோடும் பணிபுரிவதில் சிரமம் இருக்காது.

கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல் என மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கிறார்கள். அதைப் போல் தமிழகத்திலும் ஏராளமான கன்னடர்கள் காலங்காலமாக வாழ்கிறார்கள். ஆகவே இரு தரப்பினரிடையே சகோதர உணர்வையும் அன்பையும் வளர்க்க வேண்டும்.   எனவே காவிரி போன்ற விவகாரங்களை வெறுமனே உணர்வு எழுச்சியோடு அணுகாமல், கள யதார்த்தத்தின் அடிப்படையில் நிதானமாக‌ அணுகி சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டும்.

காங்கிரஸுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே மிக நீண்ட கால உறவு இருக்கிறது. தமிழகம் காமராஜரில் தொடங்கி மிகச் சிறந்த தலைவர்களைக் காங்கிரஸுக்கும் நாட்டுக்கும் வழங்கி இருக்கிறது. இங்குக் காங்கிரஸ்  ஆட்சி நடைபெற்று நீண்ட காலம் ஆனாலும், மேலிடத் தலைவர்களுக்குத் தமிழ்நாட்டின் மீது மிகுந்த அன்பு இருக்கிறது. குறிப்பாக ராகுல் காந்திக்குத் தமிழ்நாட்டின் மீது தனிப்பட்ட அக்கறை இருக்கிறது.

ராகுல் என்னிடம் ‘‘அண்டை மாநிலத்தைச் சேர்ந்த உங்களை நியமித்ததே அடிக்கடி தமிழ்நாட்டுக்குச் சென்று கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்’’ எனக் கூறினார்.  தமிழகத்தில் இளைஞர்களையும், மூத்தவர்களையும் அனுசரித்து அடிமட்ட அளவிலும் கட்சியை வளர்க்க வேண்டும் என மேலிடத் தலைவர்கள் அறிவுரை கூறினார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமாரின் மறைவு கன்னியாகுமரி தொகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  தொகுதி மக்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை.   எனவே அந்த தொகுதியில் உள்ள மக்களின் கருத்தையும், கட்சி நிர்வாகிகளின் முடிவையும் கேட்டறிந்த பிறகே வேட்பாளரை முடிவு செய்வோம்.

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல், தலைவர்களைச் சந்திக்காமல், இவ்வளவு சீக்கிரம் காங்கிரஸுக்கு எத்தனை இடங்களை கேட்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்வது சரியாக இருக்காது.  திமுக மு.க.ஸ்டாலின் தலைமையில் பலமான கட்சியாக இருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில் காங்கிரஸ் வரும் தேர்தலைச் சந்திக்கும்.  தேர்தல் காலத்தில் இரு தரப்பும் பேசி பரஸ்பர புரிதலோடு, மதிக்கத்தக்க எண்ணிக்கையில் தொகுதி களை பெறுவோம்

தற்போது மத்தியில் நடக்கும் பாஜகவின் மோசமான ஆட்சியை பார்த்த தமிழர்கள் காங்கிரஸின் ஆட்சியை விரும்புவதாகக் கூறினார்கள்.   ஆனால் ஆட்சியில் பங்கேற்பதை பற்றியெல்லாம் கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும். ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்கிறேன்.  தமிழகத்தில் காங்கிர‌ஸை தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவேன்.” எனத் தெரிவித்துள்ளார்.