சித்தாந்தக் கருத்துக்களுக்காக யாரையும் சிறையில் அடைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். ஆர்வலர் சீனிவாசன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் என்.ஐ.ஏ மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

சமீப காலமாக, சித்தாந்த காரணங்களுக்காக தனிநபர்களை சிறையில் அடைக்கும் போக்கு அதிகரித்து வருவதை நாம் கவனித்து வருகிறோம். ஆனால், இது சரியான நடத்தை அல்ல என்று கூறி, சீனிவாசன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் கோரி விண்ணப்பித்த குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சீனிவாசன் கொலை வழக்கில் நேரடிப் பங்கு இல்லை என்று தீர்ப்பளித்தது. எனவே, ஜாமீன் வழங்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனிவாசன் கொலை வழக்கை மத்திய அரசு 2022 டிசம்பரில் NIA-விடம் ஒப்படைத்தது. விசாரணை நடத்திய NIA, 26 PFI செயல்பாட்டாளர்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியது. ஜூன் 2024 இல், கேரள உயர் நீதிமன்றம் 9 பேரைத் தவிர மீதமுள்ள 17 குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியது.
மீதமுள்ள 9 குற்றவாளிகளில் சிலர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதில், கேரள பி.எஃப்.ஐ பிரிவின் பொதுச் செயலாளராக இருந்த குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.