மதுரை; கோயில் திருவிழா என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல்களை அரங்கேற்றினால் கடும் நடவடிக்கை வேண்டும என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக கிராமப்பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். சமீபகாலமாக கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. ஆகவே தற்போது ஆடல், பாடலுக்கு போலீஸார் அனுமதி அளிப்பதில்லை.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழும் கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தர விடக் கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, கோயில் விழாக்களில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டார்.
“ஆடல், பாடல் நிகழ்ச்சியை இரவு 7.30 மணிக்குத் தொடங்கி 10 மணிக்குள் முடிக்க வேண்டும். நிகழ்ச்சியில் எந்தவிதமான ஆபாச நடனமோ, ஆபாச வசனங்களோ இடம் பெறக் கூடாது. மாணவர்களின் மனதைக் கெடுக்கும் விதமான இரட்டை அர்த்தப் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.
மது போதையுடன் வருவோரை அனுமதிக் கக் கூடாது,
குறிப்பிட்ட அரசியல் கட்சி, மதம், ஜாதி சார்ந்த பாடல்கள், நடனம் இடம்பெறக் கூடாது. கட்சி, மதத் தலைவர்களுக்கு ஆதரவாக பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது. மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் நிகழ்ச்சி இருக்கக் கூடாது.
இந்த நிபந்தனைகள் மீறப்பட்டாலோ, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டாலோ காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்போது, இந்த அனைத்து நிபந்தனைகளையும் குறிப்பிட்டு காவல்துறையினர் எழுத்துப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.