மாட்ரிட்: கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்புநிலை திரும்பாது என்று விரக்தியாக கருத்து வெளியிட்டுள்ளார் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ்.

கொரோனா தொற்றால், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் முக்கியமானது. கொரோனா வைரஸ் தொற்றால், ஸ்பெயினில் இதுவரை 1.77 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 18,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்ததால், ஊரடங்கு உத்தரவை சற்று தளர்த்தியது ஸ்பெயின் அரசு. குறிப்பாக, அங்குள்ள தொழிற்சாலைகள், கட்டுமானம் தொழில்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக, 5,100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் புதிதாக பாதிப்புக்கு உள்ளானோரில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்புநிலை திரும்பாது என்று விரக்தியாக கருத்து வெளியிட்டுள்ளார் அந்நாட்டுப் பிரதமர். இதே கருத்தை கடந்த வாரம் கனடா பிரதமரும் தெரிவித்திருந்தார்.