சென்னை,
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததற்கு திமுகவும், காங்கிரசுமே காரணம் என்று மக்களவை துணைசபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை கூறி உள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பாக உச்சநீதி மன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசும் தமிழகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த தால், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நாளை மறுதினம் தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தம்பிதுரை, தமிழகத்தில் நீட் தேர்வு, மத்திய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது என்றும், இன்றைய பிரச்சினைக்கு அதுவே காரணம் என்று கூறினார்.
மேலும், தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்ததையும் அப்போது சுட்டிக்காட்டினார்.
மேலுரும், நீட் விலக்கு குறித்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றிதான் தர முடியும்; அதற்கு மத்திய அரசு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நளினி சிதம்பரத்தின் விலக்கு காரணமாக, தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் மத்திய அரசின் உத்தரவுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்