சென்னை:
கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் வாகனங் களை இயக்க யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மற்றொரு புறம் தளர்வுகளும் தாராளமாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, வெளி இடங்களுக்கு செல்வோர் அரசிடம் இ-பாஸ் பெற்றுக்கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது எந்தவித பாஸ்களும் தேவையில்லை, அடையாள அட்டை இருந்தாலே போதுமானது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில்,  தமிழகஅரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணைப்படி, கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலம் தவிர ஏனைய  கிராமம், தொழிற்பேட்டைகள் மற்றும் நகர பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுதத தொழில்கள் உற்பத்தி துவங்க எந்தவித அனுமதியும் பெறத்தேவையில்லை, மேலும் வாகனங்கள் இயக்குவதற்கான அனுமதியும் பெறப்பட வேண்டியதில்லை. ஆனால்,  பணிக்குச் செல்வோர் அவர்களது பணி அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி மாவட்ட தொழில்மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.