புதுடெல்லி: என்ஐடி உள்ளிட்ட இதர மத்திய அரசின் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கு, பள்ளி மேல்நிலைத் தேர்வுகளில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டுமென்ற நிபந்தனை இந்தாண்டு விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
“தற்போது நிலவிவரும் கொரோனா நெருக்கடி காரணமாக, மத்திய கல்வி நிறுவன இட ஒதுக்கீட்டு வாரியம்(), என்ஐடி உள்ளிட்ட இதர மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் நிபந்தனை இந்தாண்டு தளர்த்தப்படுகிறது” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
“ஜேஇஇ முதன்மை தேர்வு 2020 தேர்ச்சிபெற்ற மாணாக்கர்கள், பள்ளி மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சியடைந்தற்கான சான்றிதழை மட்டும் பெற்று சமர்ப்பித்தால் போதுமானது. அவர்களின் மதிப்பெண் பிரச்சினையில்லை” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக, ஜேஇஇ முதன்மை தேர்வு தேறுவதுடன், பள்ளி மேல்நிலைத் தேர்வுகளில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது அத்தேர்வில் அதிக சதவீதம் பெற்றவர்களில் முதல் 20 இடங்களுக்குள் வர வ‍ேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.