தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜியிடம், முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ஊழல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை விரைவில் அமலாக்கத்துறை கைது செய்யும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “அண்ணாமலை என்ன அமலாக்கத்துறை இயக்குனரா ? சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்பான அமலாக்கத்துறையை ஒரு அரசியல் கட்சி எப்படி ஆட்டுவிக்கிறது என்பதற்கு அவரது பேச்சே சான்றாக உள்ளது”

மேலும், “கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி மக்கள் அளித்த தோல்விக்குப் பிறகு தொகுதிப் பக்கமே தலைகாட்ட முடியாதவர் இந்த அண்ணாமலை. கையில் ஆவணம் ஏதும் இன்றி மண்டையில் மூளையில்லாமல் வெட்டிப் பேச்சு பேசுபவருக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” என்று காட்டமாக கூறினார்.