சென்னை: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது என்றும்,  தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவது குறித்து கடந்த 2011ம் ஆண்டே அரசாணை போட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகளையும் அதிகரித்துள்ளது. வழிபாட்டுத்தலங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த  அரசு அனுமதி வழங்கி உள்ளது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ள சுகாதாரத்துறை, இந்த வாரம் பொங்கல் பண்டிகை என்பதால், மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  இன்று, மாநில அமைச்சர் மற்றும் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

“தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு தொற்றின் தன்மை அறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,21,000 பேர் சென்னையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். வீட்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு  காணொலி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மாத கணக்கில் ஊரடங்கு வரக் கூடாது என்பது தான் முதல்வரின் கருத்து. எனவே, கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

இந்த பொங்கல் பண்டிகை  வருவதால்,  மெகா தடுப்பூசி முகாம் கிடையாது. அடுத்தவாரம் வழக்கம்போல் சனிக்கிழமையில் முகாம் நடைபெறும்.  மக்கள் மெகா தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் .அதே சமயம், தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 4 லட்சம் பேர் தகுதியானவர்களாக உள்ளனர் என்றார்.

சிறார் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில்,நாட்டிலேயே தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது.

இன்று திறக்கப்படவுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் குறித்து பேசிய அமைச்சர், ”தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு 2011 பிப்ரவரியிலேயே திமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அதிமுகவால் தான் இத்திட்டப் பணிகள் தாமதமானது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி திமுக அரசின் திட்டம். இது குறித்து அதிமுக மார்தட்டி கொள்வதில் என்ன ஞாயம் இருக்க முடியும்”, என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.