லண்டன்: நிறவெறிக்கு எதிராகப் போராடாமல் மற்றும் மாற்றத்திற்கு உதவாமல், வெற்றியினால் எந்தப் பயனுமில்லை என்றுள்ளார் உலக சாதனையை சமன் செய்துள்ள கார் பந்தய வீரர் பிரிட்டனின் லூயிஸ் ஹாமில்டன்.

மொத்தம் 7 கிராண்ட் பிரிக்ஸ், ஃபார்முலா 1 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள ஹாமில்டன், ஜெர்மனியின் முன்னாள் வீரர் ஷுமேக்கரின் சாதனையை சமன்செய்துள்ளார்.

அதேசமயம், அதிக வெற்றிகள், போல்கள் மற்றும் போடியம்கள் எண்ணிக்கையில், ஷுமேக்கரை விட இவர் முன்னிலையில் உள்ளார். வரும் நாட்களில், இவர் மேலும் பல சாதனைகளைப் படைப்பார்.

ஒரு கருப்பின தந்தைக்கும், வெள்ளை இன தாய்க்கும் பிறந்த ஹாமில்டன், நிறவெறிக்கு எதிரான கருத்துடையவர். இந்நிலையில், அதுகுறித்து மீண்டும் பேசியுள்ளார் 35 வயதான ஹாமில்டன்.

“போட்டியிடுவது, சாம்பியன் ஆவதும் மகிழ்ச்சியான விஷயம். ஆனால், அதன் உண்மையான பயன் என்ன? நீங்கள் மாற்றத்தைக் கொணர உதவவில்லை எனில், அந்த வெற்றியால் எந்தப் பயனுமில்லை. என்னால் இந்த நேரத்தில் அமைதியாக இருக்க முடியாது” என்றுள்ளார் அவர்.