சென்னை: தமிழ்நாட்டில் தற்போது தீவிர கவனிப்பில் இருக்கும் கொரோனா நோயாளிகளில், ஒருவர் கூட வென்டிலேட்டரில் வைக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது‍தொடர்பாக மாநில சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுவதாவது; மொத்தம் 2700க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1416 பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், அவர்களில் ஒருவருக்கும் வென்டிலேட்டர் தேவைப்படவில்லை.
மாநிலத்தில் கொரோனா பரவல் விகிதம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக உள்ளது. இதுதொடர்பாக ஆய்வுசெய்ய தேசிய தொற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. இதுவரை நிகழ்ந்த 28 கொரோனா மரணங்கள் அன‍ைத்துமே விரைவாக நிகழ்ந்தவை. அவர்களில் யாரும் வென்டிலேட்டர்களில் இருக்கவில்லை.
இதுவரை, வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டவர்கள் யாரும் இறக்கவில்லை. மேலும், வென்டிலேட்டர் தேவைப்பட்டவர்களும் 12 மணிநேரங்களுக்கும் குறைவாகவே அதில் இருக்க வேண்டிய தேவை இருந்தது. இதுஒரு நேர்மறையான அறிகுறி.
வயதானவர்களும் ஆரோக்கியமான உடல்நிலையை வைத்துள்ளனர். தமிழகத்தைப் போன்ற மக்கள்தொகை கொண்ட பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், இங்கு குணமடைந்தோர் (54%) அளவும், இறந்தோர் எண்ணிக்கையும் குறைவு.
மே மாதம் 2ம் தேதி வரையிலான நிலவரப்படி, மொத்தம் 2757 பேரில், 1341 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.