சென்னை: வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக,  முன்கூட்டியே பள்ளி தேர்வுகள் நடத்தப்படாது என்று தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. வைரஸ் காய்ச்சல் தொடர்பாக, அண்டை மாநிலங்களான ஆந்திராவில் அரைநாள் வகுப்பும், புதுச்சேரியில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், காய்ச்சல் காரணமாக, 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை சுமார் 50ஆயிரம் மாணாக்கர்கள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் மொழித்தாள் தேர்வை எழுத வராத விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,  பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது,  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு சூழல் ஏற்படவில்லை, இருப்பினும் காய்ச்சல் தொடர்பாக மருத்துவத்துறை ஆலோசனையின்படி செயல்படுவோம் என தெரிவித்தார்.

பொதுத்தேர்வில் மாணவர்கள் பங்கேற்காது ஏன் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தேர்வுக்கு பயந்து வராமல் இருக்கிறார்களா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது. 1 – 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். காய்ச்சலால் பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்படவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

அதுபோல செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, ரிசல்ட் வந்த ஒரு மாதத்தில் மறுதேர்வு நடைபெறும் என்றும், அதில் தேர்வில் தோல்வி அடைந்தவர்களோடு சேர்த்து தேர்வு எழுதாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை 80 சதவீத மாணவ, மாணவிகள் எழுதியிருப்பதை வெற்றியாக கருதுவதாக குறிப்பிட்ட அவர், விடுபட்ட மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.