பென்னாகரம்: தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட  பட்டாசு தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்த மான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென  எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென அருகே உள்ள அறைகளுக்கும் பரவியது. இதனால், அங்கு பணியாற்றி வந்த பெண்கள் உள்பட பலர் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த விபத்தில் பழனியம்மாள், முனியம்மாள் என்ற இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரழந்துள்ளர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், தீக்காயம் அடைந்த சிவசக்தி உள்பட சிலரை மீட்டு,  தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.