பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை வெள்ளம் புரட்டிப்போட்டு, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நின்று 2 மாதங்கள் வரை ஆனபோதிலும், மத்திய அரசின் நிதியுதவி மாநில அரசை வந்தடையவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது கர்நாடகாவில் 17 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நெருங்கும் வேலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் கோபத்தை சம்பாதிக்காமல் இருக்க, வேறு 39 துறைகளின் நிதியை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மாநில பா.ஜ. அரசு திருப்பி விட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தலித் மற்றும் ஆதிவாசி மக்கள், தங்களுடைய வீடுகளை மறுகட்டுமானம் செய்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில், பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத் துறை, கிராமப்புற வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நி‍தியை, மிகவும் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் வைத்துக்கொண்டு, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்தம் 39 துறைகளோடு, முதல்வர் எடியூரப்பா செப்டம்பர் மாதம் 20ம் தேதி சந்திப்பு நடத்தி, நிதியை திருப்பிவிடுவது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார். மொத்தம் ரூ.1100 கோடியை திருப்பி விடும்வகையில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.