சென்னை: செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதாவது,  தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் செவிலியர் படிப்பில் மாணவர் சேர்க்கை கிடையாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மைதான வளாகத்தில் தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தைப் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இதில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சு.பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,  இந்த மருத்துவமனையில் முதியோர் களுக்கான பல்வேறு வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.  24 மணி நேரமும் புற நோயாளிகள் பிரிவு இங்குச் செயல்படும். வயதானவர்கள் அறிவுத்திறன் குறைபாடு மற்றும் நிலை தடுமாறி விழுதல், எலும்பு தேய்மானம், சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் கழிதல், நாள்பட்ட வலி உள்ளிட்ட நோய்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் சிறப்பு வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கண், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைகள், சிறுநீரக அறுவை சிகிச்சை போன்ற முக்கிய சிகிச்சைகளும் இந்த மையத்தில் முதியோர்களுக்கு அளிக்கப்பட்ட உள்ளன. இங்கு 200 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. முதியோர்கள் சிகிச்சை பெறும் போது மன அழுத்தம் இன்றி சிகிச்சை பெறுவதற் காக நூலகமும் திறக்கப்பட்டுள்ளது.  ஓய்வு நேரத்தில் அவர்கள் விளையாடப் பாரம்பரிய விளையாட்டுக்களான பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனைக்குத் தேவையான அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே முதியோர்களுக்குச் சேர்க்கை அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்துபேசியவர்,  தமிழ்நாட்டில் 10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு விரைவில் தொடங்கப்பட உள்ளதால், தேர்வு  எழுதும் மாணவர்களுக்குப் பள்ளிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுத் தேர்வினை மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி எழுதலாம் என்றார்.

மேலும்,  தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பில் செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்குக் கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அதற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் செவிலியர் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 

அதனால்,   புதிதாகத் துவக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் கல்வி ஆண்டில் பிஎஸ்சி நர்சிங் படிப்பில் ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை. மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும் கூறினார்.