சென்னை: கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திமுக அரசு பதவி ஏற்றதும், கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த நகைகளை உருக்கி, தங்கக்கட்டிகளாக மாற்றி, டெபாசிட் செய்து, அதில் வரும் வருமானத்தைக்கொண்டு கோவில்கள் நிர்வகிக்கப்படும் என அறிவித்தது. மேலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, கோவில் நகைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், உருக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அறங்காவலர்கள் உள்ள கோவில்களில் நகைகளை உருக்குவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், கோவில் நகைகளை கணக்கெடுப்பு பணி தொடரலாம் என்று தெரிவித்ததுடன்,  தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

[youtube-feed feed=1]