குமரி மாவட்டத்தில் வருகிற 1ம் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில், கும்பப்பூ மற்றும் கன்னிப்பூ சாகுபடியில் மட்டுமே விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இங்குள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை நீரை நம்பியே விவசாய பணிகள் நடக்கிறது. இது தவிர மாவட்டத்தில் உள்ள குளங்களை நம்பியும், விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபடுவது வழக்கம். குமரி மாவட்ட அணைகளுக்கு, தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை மற்றும் கோடை மழை காலங்களில் கூடுதல் தண்ணீர் கிடைக்கும். இவற்றை சேமித்து வைத்தே விவசாயம் நடைபெறும். விவசாயத்திற்காக குமரி மாவட்ட அணைகள் ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி அணைகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அத்தோடு, பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அங்கு தண்ணீரும் தேக்கப்படவில்லை. பெருஞ்சாணி அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 23.95அடி தண்ணீரே உள்ளது. இது போல சிற்றார் 1 அணையில்5.28 அடி தண்ணீரும், சிற்றார் 2 அணையில் 5.38அடி தண்ணீரும் உள்ளது. இவை தவிர மாம்பழத்துறையாறு அணையில் 42.24அடி தண்ணீரும், பொய்கை அணையில் 8.90 அடி தண்ணீரும் மட்டுமே உள்ளது. பேச்சிப்பாறை அணையில் கடந்த ஆண்டு தொடங்கிய பராமரிப்புபணி இன்னும் முடிவடையவில்லை. தற்போது அணையில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால் அணையில் தண்ணீர் தேக்கப்படவில்லை. வருகிற அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் போதுதான் இங்கு தண்ணீர் தேக்க இயலும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த குமரி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள் சேகர், “குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் பாசனத்திற்காக ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட வேண்டும். அதற்கு குமரி மாவட்ட அணைகளில் 1500 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்க வேண்டும். பெருஞ்சாணி, சிற்றார் மற்றும் மாம்பழத்துறையாறு, பொய்கை அணைகளின் மொத்த நீர் இருப்பு 500 மில்லியன் கன அடியே உள்ளது. இந்த அளவுக்கு நீர் இருந்தால் அணைகளை திறக்க முடியாது. எனவே வருகிற ஜூன் 1ம் தேதி அணைகளை திறக்க வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார்.