திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: கொரோனாவால் மே 7 தேதி மாநிலத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 3 பேர் உயிரிழக்க மற்றவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, பல மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு தொழிலாளர்கள் வருகின்றனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருக்கிறது.
ஆனாலும் கேரளாவில் கொரோனாவின் முதல் கட்டத்தில் 30% ஆக இருந்த பாதிப்பு, இப்போது 2வது கட்டத்தில் பாதிப்பு 15% ஆக குறைந்து விட்டது. இதில் தொடர்புகள் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன.
கொரோனா தொற்று காரணமாக பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஒருவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். மே 11 அன்று அவர் வளைகுடா நாட்டில் இருந்து வந்தவர். ஏற்கெனவே நீரிழிவு, உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தவர்.
வென்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை மாநிலத்தில் சமூகப் பரவலாக மாறவில்லை. பாதிப்பு ஏற்பட்டோரின் அனைத்து தொடர்புகளையும் கண்டறிந்து நடவடிக்கையை எடுத்து வருகின்றனர் என்றார்.