கொல்கத்தா: ரயில்களில் மக்கள் இறக்கவில்லையா? என்று முசாபர்பூர் சம்பவம் குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகாரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் இறந்த கிடந்த தாய் மீது போர்த்தப்பட்ட துணியை விலக்கி விளையாடிக் கொண்டிருந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியேறி வைரலானது. இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை பற்றி பல விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தை முன் வைத்து பேசிய மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், லாக் டவுன் காரணமாக சில ஊழியர்கள் வேலைக்கு வர முடியவில்லை என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: இது துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கக்கூடும், அவை விதிவிலக்காக கருதப்பட வேண்டும். தற்போதைய நிலைமை சாதாரணமானது அல்ல. ரயில் விபத்துக்கள் ஒருபோதும் நடக்கவில்லையா? ரயில்களில் மக்கள் இறக்கவில்லையா?

ஒரு ரயிலில் சென்ற தாய் தமது குழந்தைக்கு பால் தீர்ந்துவிட்டது என்று டுவிட்டரில் கூறிய போது, அதற்கு ஏற்பாடு செய்யவில்லையா? என்று பேசி உள்ளார். அவரது இந்த கருத்துக்கு திரிணாமூல் காங்கிரசும், இடதுசாரிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து திரிணாமூல் காங். எம்பி சவுகதா ராய் கூறுகையில்,  மாநில அரசுக்கு எதிராக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்துக்கள் அவரது ஆணவத்தின் அறிகுறிகளாகும். திலீப் கோஷின் கருத்தை எத்தனை நாளைக்கு தான் நாங்கள் பொறுத்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.