சென்னை,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடை பெற்றது.
அதைத்தொடர்ந்து, தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று ஸ்டாலின் கூறினார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் 75வது ஆண்டு பவள விழா நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் காரணமாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென மாவட்டச் செயலாளர்களை அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, முரசொலி செல்வம், மு.க.தமிழரசு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஜெ.அன்பழகன், பி.கே. சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன், சுந்தர், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், உதயசூரியன் உள்பட 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் முரசொலி பவள விழா பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வும்,
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட உள்கட்சி மோதல் குறித்து விவாதிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தினகரன் அணியினரால் நெருக்கடி ஏற்பட்டால் தி.மு.க. எடுக்க வேண்டிய முடிவு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், அப்போது மாவட்ட செயலாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. உள்கட்சி மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தி.மு.க. மாவட்ட செய லாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று அதிரடியாக கூறினார்.