சென்னை:  பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து கடந்த 2 நாளில்  2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும், ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக எந்தவொரு புகாரும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது. சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையொட்டி சென்னை, கோவை போன்ற பெருநகரங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசுத் தரப்பில் 12ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம்  16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுபோல  ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால்  1800 4256 151, 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சிறப்புப் பேருந்து குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள அதுகுறித்து புகார் அளிக்க 9445014450, 9445014436 ஆகிய இரண்டு அலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு    சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்றிரவு நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது, 12-ந்தேதி சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 586 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு 1,220 பஸ்கள் இயக்கப்பட்டு 61 ஆயிரத்து 225 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்கள் நிரம்பின வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7 மணி நிலவரப்படி, தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களில் 1,544 பஸ்களும், 1,855 சிறப்புப் பஸ்களில் 904 பஸ்களும் இயக்கப்பட்டு 1 லட்சத்து 32 ஆயிரத்து 192 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 2 நாட்களில் (நேற்று இரவு 7 மணி நிலவரம்) சென்னையில் இருந்து 5 ஆயிரத்து 134 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

14-ந்தேதி (இன்று) சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது. சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.  இந்த முன்பதிவு வாயிலாக ரூ.10 கோடியே 3 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந்தேதி அன்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை, குயின்ஸ் லேண்ட் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.