சென்னை

புதிய கட்டண விகிதப்படி தொலைக்காட்சிகளை தேர்வு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு இலவச சேனல்கள் உடனடியாக ரத்து ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளுக்கு கட்டண விகிதத்தை டிராய் மாற்றி அமைத்தது. அந்த நடைமுறை இன்று அதாவது பிப்ரவரி ஒன்று முதல் அமுலாகிறது. அதன்படி இலவச சேனல்களுக்கு ரூ. 130 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டி உள்ளது. கேபிள் சேவை அளிப்போர் இதை ஒப்புக் கொண்ட போதிலும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய கட்டண விகிதத்தால் அதிகம் செலவாகும் என அச்சம் தெரிவித்தனர்.

தற்போதைய நடைமுறைப்படி பல கேபிள் சேவை அளிப்போர் ரூ 200 அல்லது ரூ.250 க்கு அனைத்து சேனல்களையும் ஒளிபரப்புகின்றனர். ஆகவே பல வாடிக்கையாளர்கள் புதிய முறைக்கு இன்னும் மாறாமல் உள்ளனர். அவ்வாறு மாறாதவர்களுக்கு இனி தொலைகாட்சி ஒளிபரப்பு எதுவுமே வர வாய்ப்பில்லை என ஒரு தகவல் பரவியது,

இந்நிலையில் டிராய் அவ்வாறு நடக்காது என தெரிவித்துள்ளது. கேபிள் சேவை பெறுவோரில் பலர் தங்கள் விருப்ப சேனல்களை தேர்வு செய்யாததால் இன்னும் சில காலங்களுக்கு இலவச சேனல்கள் அவர்களுக்கு ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது. தற்போது 100 இலவச சேனல்களுக்கு ரூ.130 கட்டணமும் மேலும் 25 சேனல்களுக்கு ரூ.20 கூடுதல் கட்டணமும் வசூலிக்க சென்னை மற்றும் தமிழ்நாடு கேபிள் சேவை அளிப்போர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் ஷகிலன், “தமிழ்நாட்டில் 65%க்கும் மேல் ஏழை மக்கள் கேபிள் இணைப்பு வாடிக்கையாளர்களாக உள்ளனர். எனவே நாங்கள் அவர்களுக்கு உதவ 150 சேனல்களை ஜிஎஸ்டியுடன் சேர்ந்து ரூ.177 க்கு அளிக்க திட்டம் ஒன்று தீட்டி உள்ளோம். இதைத் தவிர சன் டிவி போன்ற புகழ்பெற்ற சேனல்களையும் சேர்த்து ஜிஎஸ்டியுடன் ரூ.250க்கு அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.