சென்னை: நலத்திட்டப்பணிகளுக்கு கோவையில் 2 நாட்கள் முகாமிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் கோவை சென்றடைந்தார். அங்கு சென்ற அவருக்கு வழிநெடுக திமுக தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்பு கொடுத்த நிலையில், சாலையெங்கும் வரவேற்பு பேனர்கள் காணப்படாதது வியப்பை ஏற்படுத்திய நிலையில், பங்கேற்க போகும் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ள மேடையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் படம் இடம்பெறாதது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில்,இன்று மக்கள் நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை கோவை சென்றார். கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.
கோவையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு அரசு கட்டிடங்களை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பயனாளிகளுக்கு, அரசு நல உதவிகளை வழங்க உள்ளார்.
இதன்பிறகு மீண்டும் கோவை திரும்பும் முதலமைச்சர் கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 11 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் வருகையால் இன்று கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மக்கள் உஷாராக அதை பார்த்து பயணம் செய்யுங்கள் என்று கோவை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். முதல்வர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோவை வருகை வித்தியாசமான முறையில் காணப்படுகிறது. அவரை வரவேற்று எங்கும் பேனரோ, போஸ்டர்களோ காணப்படாத நிலை உள்ளது. இது பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி விழா மேடையில், முதலமைச்சர் ஸ்டாலின் உருவப்படம் கூட இடம்பெறாதது மகிழ்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.