ஆஸ்திரேலியா தொடரில், 6வது பந்துவீச்சாளர் யார்? என்ற பிரச்சினை, இந்திய அணிக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை.

காயம் முழுமையாக குணமாகாத நிலையில், ஆல்ரவுண்டர் பாண்ட்யாவால் பந்துவீச முடியாத நிலையில், இந்தியா, ஒருநாள் தொடரில் 5 பந்துவீச்சாளர்களை நம்பியே களமிறங்கியது. இதனால், அத்தொடரையே இழந்தது. கடைசி ஒருநாள் போட்டியில், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகுர் ஆகியோர் சிறப்பாக செயல்பட, இந்திய அணி ஒருவழியாக வென்றது.

அதேசமயம், ஆஸ்திரேலிய அணியில் நிரந்தரமாக 6 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். தேவைப்பட்டால், அவர்கள் 7வது பந்துவீச்சாளரையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், இந்தியாவின் நிலைமை வேறாக இருக்கிறது.

ஆஸ்திரேலியப் பயணத்தில், இதுவரையான போட்டிகளில், முக்கியப் பந்துவீச்சாளரான முகமது ஷமி, ஒரு போட்டியில்கூட பெரிதாக சோபிக்கவில்லை. பும்ராவும் சொல்லிக்கொள்ளும்படியாக ஆடிவிடவில்லைதான். இன்றையப் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

எனவே, முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட 2 பந்துவீச்சாளர்கள் சொதப்புகையில், 6வது பந்துவீச்சாளர் ஒருவர் இருந்தால்தான் அணி தப்பிப் பிழைக்கும்.

இன்று, ஜடேஜா காயத்தால் வெளியேற, அவரின் இடத்தில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இறக்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் சோபிக்காத நிலையில், இன்று மாற்றாக களமிறங்கிய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக செயல்பட்டு, 3 மிகமுக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இன்றையப் போட்டியில், முகமது ஷமி மிக மோசமாக பந்துவீசிய நிலையில், வாஷிங்டன் சுந்தர், சாஹல், நடராஜன் மற்றும் தீபக் சாஹர் ஆகிய நால்வரைத்தான் இந்திய அணி நம்ப வேண்டியிருந்தது. அவர்கள், எப்படியோ கஷ்டப்பட்டு அணியை கரைசேர்த்து விட்டார்கள்.

இந்நிலையில், இந்திய அணி நிர்வாகம், 6வது பந்துவீச்சாளர்கள் விஷயத்திற்கு விரைவில் தீர்வுகாண வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன.