சென்னை: சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை தொடர்பாக : எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சென்னை உயர்நீதி மன்றத்தில்  மத்தியஅரசு  தகவல் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் நலச்சங்கம் சார்பில் சுற்றுச்சுழல்வரைவு அறிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு  தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா  அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின்போது, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தயாராக இருப்பதாக மத்தியஅரசு அறிவித்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொலி காட்சி மூலம் ஆஜரான  மத்திய அரசு வழக்கறிஞர், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வரைவு அறிக்கைக்கு பிற மாநில உயர் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அதன் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதால் இந்த வழக்கில் பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.