கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள், பாமக உள்பட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டு19ந்தேதி கடலூரில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில், என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் முன்னிலையில், நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள லிக்னைட் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், பண்ருட்டி தி.வேல்முருகன், விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், புவனகிரி அருண்மொழித்தேவன், சிதம்பரம் பாண்டியன் உள்பட பல முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர். ஆனால், விவசாயிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனால், அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்பட்டது.
அப்போது, என்என்சி நிர்வாகம் வாக்களித்தபடி நடந்துகொள்ளவில்லை என்றும், நிலங்களை கையகப்படுத்தும் போது வழங்க வேண்டிய நியாயமான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை ஆகியவற்றை இதுவரை வழங்கவில்லை. மேலும் பொறியாளர் தேர்வில் 299 பேரில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. குறிப்பாக நிலங்களைக் கொடுத்த ஒருவருக்குகூட நிரந்தர வேலை வழங்கவில்லை. எனவே நிலம் கையகப்படுத்தும் என்.எல்.சி குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கர் ஒன்றுக்கு 50 லட்சம் இழப்பீட்டு தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என சிலர் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிலம் கையகப்படுத்தப்படவுள்ள வானதிராயபுரம், வடக்குவெள்ளூர், கரிவெட்டி, கத்தாழை, வளையாமதேவி உள்ளிட்ட 14 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நிரந்தர வேலை, அதிகபட்ச இழப்பீடு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் என்.எல்.சி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர் வசதி பள்ளிக்கூடங்களில் கட்டிட வசதி, மருத்துவமனைகள் அமைத்து தர வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர். இதையடுத்து நிர்வாகம் சார்பில், மக்களின் அனைத்து குறைகளையும் நிறைவேற்றித் தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
அதுபோல நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சி.வி.கணேசனும், “கடந்த காலங்களில் என்.எல்.சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகை மற்றும் வேலைவாய்ப்பினை முழுமையாக வழங்காதது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் காலங்களில் பாதிக்கப்படுகின்ற அனைத்து கிராமங்களுக்கும் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வர் மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கைகளையும், விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்” என்று கூறினார்.
இந்த நிலையில், தற்போது என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் சூடுபிடித்துள்ளது. நிலம் கையகப்படுத்துபவர்களுக்கான இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, வடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு 15 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், வீடுடன் கூடிய ஒரு ஏக்கர் நிலத்திற்கு 78 லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில கையப்படுத்தும் பணி தொடர்பான மக்களின் குறைகளை அறிய, மக்கள் குறை தீர்ப்பு மையம் அமைக்கப்படும் எனவும், நிலம் கையப்படுத்தப்படும் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனம் ஆயிரம் நபர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும், நிலம் கையப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிப்ளமோ – ஐடி போன்ற தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 4 ஆண்டுகளில் சுமார் 500 பேருக்கு நிரந்தர வேலை வழங்க வழிவகை செய்யப்படும் எனவும், அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.