சென்னை: என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதற்கு தொழிற் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.
என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில், திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ வேல்முருகன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது, உரிய இழப்பீடு, மாற்று இடம் வழங்காததால் என்.எல்.சிக்கு நிலம் வழங்கியவர்கள் தவிப்பதாக கூறிய வேல்முருகன், முதலமைச்சர் தலை யிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவாததில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் சட்டம்ன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, கடந்த காலத்தில் அரசுக்கும், கடலூர் மக்களுக்கும் என்எல்சி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், கடலூரில் 50 ஆண்டுக்கு முன் 10 அடியில் கிடைத்த நீர், தற்போது 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து பதில் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, என்எல்சி விவகாரத்தில், தேவைக்கு அதிகமான நிலத்தை அரசு ஒரு போதும் கையகப்படுத்தாது என கூறியவர், விவசாயிகளிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. உயர்த்தப்பட்ட இழப்பீடு தொகையை வழங்குவது, மறுவாழ்வுக்கான பலன்களை அளிப்பது குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.